The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
நெகிழி அல்லது பிளாஸ்டிக் (Plastic) என்பது ஒரு பொருள் ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுகி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும். "வார்க்கத் தக்க ஒரு பொருள்" என்னும் பொருள் தரும் "பிளாஸ்டிகோஸ்" என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது. நெகிழி என்னும் பொருளானது பிசைவு கொள்ளும் பொருள் ஆகும்.
டெங்குக் காய்ச்சல் (Dengue fever) என்ற டெங்கி காய்ச்சல் அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் ஏற்படும். தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும்.
திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார்.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கிலம்:Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
அனுமனை நினைவு கூர அனுமான் ஜெயந்தியை கொண்டாடுகின்றனர். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டும் ஹனுமான் ஜெயந்தி மார்கழி மாதம், அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று அனைத்து ஹனுமார் கோயில்களிலும் வைணவக் கோயில்களிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் பிற மாநிலங்களில் வைகாசி மாதம் வளர்பிறையில் வரும், தசமி திதியன்று, அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள்.ஆஞ்சனேயர் ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதமிருந்து, அனுமாருக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்தும் வழிபடுவர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு (environmental protection) என்பது சுற்றசூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகையினாலும் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்று சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
இயற்கை வேளாண்மை என்பது செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை), மரபணு மாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனித சாக்கடைக்கழிவுகள் ஆகியவற்றை குறைவாக பயன்படுத்தி அல்லது முற்றிலுமாக தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயரியல் (பூச்சி, நோய் மற்றும் களை) நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை அடிப்படையாக கொண்ட ஒரு வேளாண்மை (விவசாய) முறைமையாகும். இயற்கை வேளாண்மை விளைந்த பொருட்களின் சுகாதாரம், மனிதர்களின் நலம், தரச்சான்றுக்கு மற்றும் விற்பனை ஆகியவற்றைப்பற்றி விவரிக்கிறது.
சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, சனவரி 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன.
உழவு அல்லது வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான்.
சுற்றுச்சூழல் மாசுபாடு (சூழல் மாசடைதல்) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும். சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது.
அன்னை தெரேசா (Mother Teresa, ஆகத்து 26, 1910 - செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார்.
கதிரவ அமைப்பு (Solar System) அல்லது சூரியக் குடும்பம் என்பது கதிரவனுக்கும் அதைச் சுற்றி வரும் பொருட்ளுக்கும் இடையே உள்ள ஈர்ப்புவிசைப் பிணைப்பால் உருவான ஒரு அமைப்பாகும். இது கதிரவனைச் சுற்றி வரும் எட்டு கோள்களையும், ஐந்து குறுங்கோள்களையும் உள்ளடக்கியது ஆகும் என்று உலகளாவிய வானியல் ஒன்றியம் வரையறுத்துள்ளது. இந்த அமைப்பில் கதிரவனை நேரடியாக சுற்றி வரும் பெரிய அளவு கொண்ட கோள்களும் சிறிய அளவு கொண்ட குறுங்கோள் மற்றும் சிறு கதிரவ அமைப்பு பொருட்கள் போன்றவையும், கதிரவனை மறைமுகமாக சுற்றி வரும் துணைக்கோள்களும் அடங்கும்.
நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், உருசியாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன.
பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி அல்லது பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி (Acquired immune deficiency syndrome) என்பது எச்.ஐ.வி எனப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் குறைப்பு செய்யும் திறன் கொண்ட தீ நுண்மத்தால் (வைரசால்) ஏற்படுகிற ஒரு நோயாகும்,. இந்த நோயானது மனிதர்களின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் செயற்படுதிறன் வலுவற்றதாகும் நிலையை படிப்படியாகத் தீவிரமடையச் செய்து, வாய்ப்பை எதிர் நோக்கியிருக்கும் தொற்றுநோய்களாலும், கட்டிகளாலும் மனிதர்களை இலகுவில் பாதிப்படையக் கூடியவர்களாகச் செய்கிறது. எச்.ஐ.வி தொற்றுக்குட்பட்ட இரத்தம், விந்து, யோனித் திரவம், முன்விந்துத் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களைக் கொண்ட உடலில் உள்ள சீதச்சவ்வு அல்லது இரத்த ஓட்டத்துடன் ஏற்படும் நேரடித் தொடர்பினால் இந்த வைரசானது ஒருவரிலிருந்து வேறொருவருக்குத் தொற்றுகின்றது.
சொல் (ஒருசொல், ஒன்று அல்லது பல பொருள், நிகண்டு வழி)
ஒரு சொல்லானது இன்னின்ன பொருளைத் தரும் என முதன்முதலில் தோன்றிய திவாகர நிகண்டு சொற்பொருள் இங்குத் தொகுக்கப்பட்டு அகர வரிசையில் தரப்படுகின்றன. இத்தொகுப்பில் 343 சொற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலுக்குச் சேந்தன் திவாகம் என்னும் பெயரும் உண்டு.
பாபா சாகேப் (பொருள்: தந்தை) என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கிலம்:Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; பிறப்பு:14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
தமிழ் கலாச்சாரம், தமிழ் மக்களின் பண்பாடு ஆகும். தமிழ் கலாச்சாரம் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ளது. தமிழ் கலாச்சாரம் மொழி, இலக்கியம், இசை, நடனம், நாட்டுப்புற கலை, தற்காப்பு கலை, ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, விளையாட்டு, ஊடகங்கள், நகைச்சுவை, உணவு, ஆடைகள், கொண்டாட்டங்கள், தத்துவம், மதங்கள், மரபுகள், சடங்குகள், நிறுவனங்கள், அறிவியலை வெளிப்படுத்தப்படுகிறது மற்றும் தொழில்நுட்பம்.
2.0 அல்லது முன்னதாக எந்திரன் 2 என்பது சங்கர் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டில் தமிழ் மற்றும் இந்தியில் வெளியான ஒரு இந்திய அறிபுனை திரைப்படமாகும். 2010 ஆம் ஆண்டில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவரும் இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுபாஸ்கரன் அல்லிராஜாவின் லைக்கா புரொடக்சன்சு தயாரித்தது.
தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் என்றும், தஞ்சைப் பெரிய கோயில் ("Big temple") அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் ("Peruvudayar Temple") என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் அல்லது கல்வி சட்டம் (RTE) 4 ஆகஸ்ட் 2009 இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இந்த கல்வி உரிமை சட்டம் இந்தியாவில் 6 மற்றும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி முக்கியத்துவத்தை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 21A கீழ் விவரிக்கிறது. சட்டம் ஏப்ரல் 2010 1 ம் தேதி அமலுக்கு வந்த போது, இந்தியா கல்வி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு அடிப்படை உரிமை என்று செய்யும் 135 நாடுகளில் ஒன்றாக மாறியது.
ஊனம் என்பது, மற்றவர்களுடன் ஒப்பிடும்போது இயலாத்தன்மை இருப்பதைக் குறிக்கும். இது, உடற் குறைபாடு, புலன் குறைபாடு, அறிதிறன் அல்லது அறிவுத்திறன் குறைபாடு, உளவியல் குறைபாடு, பிற நோய்கள் தொடர்பான குறைபாடு என்பவை தொடர்புடையதாக இருக்கலாம். ஊனம் ஒருவருடைய வாழ்க்கைக் காலத்தில் ஏற்படலாம் அல்லது பிறப்பிலேயே இருக்கலாம்.
சுகாதாரம் (Hygiene) அல்லது வழக்குமொழியில் சுத்தம் என்பது நலம் மற்றும் நலமான வாழ்வு கருதி ஒரு சமூகத்தால் பேணப்படும் பழக்க வழக்கங்களாகும். தற்கால மருத்துவ அறிவியலில் வெவ்வேறு நோய்நிலைகளுக்கு குறிப்பிட்ட சுகாதார சீர்தரங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும் சுகாதாரம் குறித்த வரையறை வெவ்வேறு பண்பாடு, பாலினம் மற்றும் முதுமைக் குழுக்களில் மாறுபடுகின்றது. சில வழமையான சுகாதாரச் செய்கைகள் நல்ல பழக்கங்களாகவும் சுகாதாரம் பேணாமை வெறுப்பை ஊட்டுவதாகவும் மரியாதைக் குறைவாகவும் சிலநேரங்களில் அச்சுறுத்தலாகவும் சமூகத்தால் எடுத்துக்கொள்ளப் படுகிறது.
பெண்களின் கல்வி என்பது பெண்கள் கல்வி பெறுவதற்கான உரிமை, அதன் நிலைமை, தடைகள், எதிர்காலம் போன்ற பல விடயங்களைக் குறிக்கும். வரலாற்றின் பெரும் பகுதியில், அனேக சமூகங்களில் பெண்கள் ஆண்களுக்கு நிகரான கல்வி பெறும் வாய்ப்பைப் பெறவில்லை. 19 ம், 20 ம் நூற்றாண்டில் வளர்ச்சி பெற்ற பெண்ணிய இயக்கம், அனைவருக்கும் கல்வி என்ற கோட்பாடு போன்றவை பெண்களுக்கான சம கல்வி வாய்ப்புக்களை ஓரளவு ஏற்படுத்தந்தன.
தற்காப்புக் கலைகள் அல்லது சண்டைக் கலைகள் (Martial arts) என்பது சண்டைக்காகப் பயிற்சி பெறுவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட மரபுகளையும் செயல்முறைகளையும் குறிக்கும். பல காரணங்களுக்காக இவற்றில் பயிற்சி பெறக்கூடும் ஆயினும், இவை அனைத்தினதும் இலக்கு ஒன்றே. இந்த இலக்கு, ஒருவர் அல்லது பலரை உடல்ரீதியாகத் தோற்கடிப்பது அல்லது தனக்கோ பிறருக்கோ ஏற்பட்டுள்ள உடல் ரீதியான பயமுறுத்தல்களுக்கு எதிராகக் அவர்களைக் காத்துக்கொள்வது ஆகும்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
இயற்கை வளங்கள் (natural resources, பொருளாதார ரீதியில் நிலம் மற்றும் மூலப்பொருள் அல்லது கச்சா பொருட்கள்) எனப்படுபவை ஒப்பிட்டளவில் மனிதத் தலையீடுகளின்றித் தன் இயல்புநிலையில் சூழல் தொகுதிகளில் காணப்படும் பொருட்கள் ஆகும். இயற்கை வளங்கள் சுற்றுச்சூழலிலிருந்து தருவிக்கப்படுபவை. இவற்றில் பெரும்பான்மையானவை நம் வாழ்விருப்புக்கு அத்தியாவசியமானவையாகவும் தேவைகளுக்குப் பயன்படக்கூடியவைகளாகவும் அமைகின்றன.
மழைநீர் சேகரிப்பு என்பது மழை நீரை வீணாக்காமல் சேமித்து வைப்பது ஆகும். மழைநீரைச் சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும், நீர்ப்பாசனத்திற்கும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் பயன்படுத்தலாம். வீடுகள், நிறுவனங்களின் கட்டிடங்களின் மேற்கூரைகளில் இருந்தும் இதற்காகத் தயார் செய்யப்பட்ட தரைவழியாகவும் சேகரிக்கப்படும் மழைநீர் குடிநீருக்கான முக்கியமான ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.சில சூழ்நிலைகளில், மழைநீர் ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய, சிக்கனமான நீர் ஆதாரம்.
தமிழர் சமையல், பல நூற்றாண்டுகளாக தென் இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும். இயற்கையுடனும் காலநிலைகளுடனும் இணைந்த ஒரு கிராமிய சூழலிலேயே இச்சமையல் வளர்ந்தது. பலவகை உணவுகளை சுவையுடன் சமைக்க விருந்தோம்ப தமிழர் சமையற்கலை வழிசொல்கின்றது.
பெண் சிசுக்கொலை என்பது கருவில் இருக்கும் அல்லது பிறந்த குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் அதனை கருவில் இருக்கும் காலத்திலோ அல்லது பிறந்த பின்போ கொன்றொழிப்பதை பொதுவாகக் குறிக்கும். பிறந்தது முதல் ஒரு வயது வரையுள்ள குழந்தை சிசு என அழைக்கப்படுகிறது. கருவில் இருக்கும் பெண் குழந்தையைக் கொல்வது பெண் கருக்கொலை எனவும், பிறந்த பின் கொல்வது சிசுக் கொலை எனவும் வழங்கப்படுகிறது.
கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல், மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி இளைய தலைமுறையினரை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
கலீலியோ கலிலி (Galileo Galilei; இத்தாலிய ஒலிப்பில்: கலிலேயோ கலிலே; 15, பிப்ரவரி 1564 – 8, சனவரி 1642), ஓர் இத்தாலிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியல் வல்லுநர், பொறியாளர், மற்றும் மெய்யியலாளர் ஆவார். இவர் பதினேழாம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிக முதன்மையான பங்கை ஆற்றியுள்ளார். கலீலியோ "நோக்கு வானியலின் தந்தை", "நவீன இயற்பியலின் தந்தை", "நவீன அறிவியலின் தந்தை" என்று பலவாறாகப் பெருமையுடன் அழைக்கப்படுகிறார்.
இக்கட்டுரை குறிஞ்சி எனும் நிலத்திணையைப் பற்றியது. குறிஞ்சி எனும் பெயர் கொண்ட செடியைப் பற்றி அறியலாம், குறிஞ்சிச் செடியைப் பார்க்கவும் குறிஞ்சி நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என அழைக்கப்படுகின்றன.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம் பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர். இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசாரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது.
மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.
வைணவ சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள் ஆவர். தென்மொழியாம் தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர். அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் ஆண்டாளையும், இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு.
கோப்பரகேசரி வர்மர் முதலாம் இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
உணவு ( ஒலிப்பு) (Food) என்பது ஒர் உயிரினத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதற்காக உண்ணப்படும் எந்தவொரு பொருளையும் குறிக்கும் . உணவு வழக்கமாக தாவரங்கள் அல்லது விலங்குகளிலிருந்து தோன்றுகிறது. கார்போவைதரேட்டுகள், கொழுப்புகள், புரதங்கள், உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் போன்ற அவசியமான சத்துகளை உணவு பெற்றுள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என்பது வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயில் நகரமான மதுரையின் மத்தியில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன். இக்கோயிலை மதுரை மீனாட்சியம்மன் கோயில் என்றும் அழைக்கின்றனர்.
கருத்தரிப்பு என்பது, பாலூட்டிகளில், கருக்கட்டல் நிகழ்வின்போது உருவாகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்த சந்ததிக்கான உயிரி, முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கரு நிலையில் குழந்தை பிறப்புவரை, பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையில் பதிந்து, தாங்கிக் கொள்ளப்படும் நிலையாகும். இந்தக் கட்டுரையில் மனிதரில் நிகழும் கருத்தரிப்பே விரிவாக ஆராயப்படுகின்றது. மனிதரில், பருவமடைந்த ஆரோக்கியமான பெண்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள் உற்பத்தியாகும்.