The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (ஆங்கில மொழி: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) மற்றும் காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்) ஆகிய நான்கு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது. இந்தக் கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், பொறுப்புணர்வை ஊக்குவித்தல், வளர்ச்சித் திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தப்படுதல் மற்றும் பயனாளிகளின் விருப்பத்தின்படி பொதுமக்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் மற்றும் சமூக தணிக்கைக்கு வழி வகுத்தலே கிராம சபைக் கூட்டதின் நோக்கமாகும். கிராம மக்களின் கையிலிருக்கும் அதிகாரம், கிராம சபைக் கூட்ட நடவடிக்கைகள் ஆகும்.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்
சதுரகிரி மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும். இக்கோயிலுக்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம், வருசநாடு எனும் பகுதியிலிருந்தும் மலைப் பாதைகள் உள்ளன. மதுரை மாவட்ட மக்கள் வாழைத்தோப்பு பகுதி, சந்தையூர் மலை பகுதி மற்றும் வத்திராயிருப்பு பகுதி மலைப்பாதையையும், தேனி மாவட்ட மக்கள் வருசநாடு பகுதி வழியிலான மலைப்பாதையையும் பயன்படுத்துகின்றனர்.
கண்ணதாசன் (ஒலிப்பு ) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
உப்புச் சத்தியாகிரகம் அல்லது தண்டி நடைப்பயணம் அல்லது தண்டி யாத்திரை (Salt March) என்பது காலனிய இந்தியாவில் ஆங்கிலேயர் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை அறவழியில் எதிர்க்கும் திட்டமிட்ட போராட்டமாகும். மார்ச்சு 12, 1930 இல் குஜராத் மாநிலத்திலுள்ள தண்டியில் தடையை மீறி உப்பெடுக்கும் நடைப்பயணமாகத் துவங்கியது. 1930 ஜனவரி 30 ஆம் நாள் இந்திய தேசிய காங்கிரசு அறிவித்த முழு விடுதலை என்ற விடுதலைப் பிரகடனத்திற்குப் பிறகு ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து அமைப்பு ரீதியாகச் செய்யப்பட்ட முதல் நடவடிக்கையாகும்.
இந்திய மற்றும் திராவிட சாதிய சமூக படிநிலை கட்டமைப்பில் அடித்தள மக்கள் பட்டியலின மக்கள் என்று பொதுவாக அடையாளப்படுத்தப் படுவார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள், நசுக்கப்பட்ட மக்கள், நொறுக்கப்பட்ட மக்கள், , தாழ்த்தப்பட்டோர், தீண்டத்தகாதவர்கள், பஞ்சமர்கள், அரிஜனங்கள், பட்டியல் இனத்தவர் என்றும் தலித்துகள் அழைக்க அல்லது குறிப்பிடப்படுவதுண்டு. இந்து-வர்ண தத்துவ சமய நோக்கில் ஒடுக்கப்பட்டவர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும், பொருளாதாரத்தில் தாழ்த்தப்பட்டு, அரசியல் அதிகார வலு அற்றவர்களாகவும், சமூகப் பண்பாட்டு நிலையில் மற்ற சமூகத்தால் வேறுபடுத்தப்பட்டவர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளனர்.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
இலங்கை (ஒலிப்பு ) (Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, சிறீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா: கு, சு, டு, து, பு, று) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துகள் (எ.கா: ற, கி, பெ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது. இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்ஒளி (இயற்பெயர்: விஜயரங்கம், 21 செப்டம்பர் 1924 - 24 மார்ச்சு 1965) புதுவையில் பிறந்த தமிழ்க் கவிஞர் ஆவார். பாரதியாரின் வழித் தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர். கவிதைகள் மட்டுமல்லாது கதைகள் கட்டுரைகள் இலக்கியத் திறனாய்வுகள் மேடை நாடகங்கள் குழந்தைப் பாடல்கள் எனப் பல இயற்றியவர்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
உழவு அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான்.
பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் இனத்தவர்கள் (Scheduled Castes & Scheduled Tribes) என்ற சமூகத்தவர்கள் கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் தகுதிகளில் இந்திய துணை கண்டத்தில் வரலாற்று ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள். பிரித்தானிய இந்தியாவில், இவர்களை ஒடுக்கப்பட்ட மக்கள் (Depressed Class) என்று வகைப்படுத்தி, அவர்களது பொருளாதார மேம்பாட்டிற்கு பஞ்சமி நிலங்கள் ஒதுக்கப்பட்டது. மகாத்மா காந்தியும், அவர்பால் ஈர்க்கப்பட்ட என்.
(சுற்றுச்சூழல் பாதுகாப்பு) (environmental protection) என்பது சுற்றசூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகையினாலும் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்று சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளைய தலைமுறையினரை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
பஞ்சாயத்து ஒன்றியம் அல்லது ஊராட்சி ஒன்றியம் (Panchayat Union or Block Development Office), இந்தியாவின், தமிழ்நாட்டில், 1994ம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி சட்டத்தின்படி வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டது.ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் கிராம ஊராட்சிகள் இயங்குகிறது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் 385 ஊராட்சி ஒன்றியங்களும், 12524 கிராம ஊராட்சிகளும் உள்ளது. அவற்றுள் நீலகிரி மாவட்டம் குறைந்த பட்சமாக நான்கு பஞ்சாயத்து ஒன்றியங்களும், விழுப்புரம் மாவட்டம் அதிக பட்சமாக 22 பஞ்சாயத்து ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.ஊராட்சி ஒன்றியங்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி விரிவாக்க அலுவலர்கள், மேலாளர், கணக்காளர் மற்றும் உதவியாளர்கள் ஊராட்சி ஒன்றியக் குழுவின் தீர்மானங்களை நிறைவேற்றுவார்.
சுற்றுச்சூழல் மாசுபாடு (சூழல் மாசடைதல்) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும். சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது.
முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு, தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும், ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக, தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
சுரதா (நவம்பர் 23, 1921 - சூன் 20, 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர்.
சத்திய சோதனை (The Story of my Experiments with Truth) என்பது மோகன்தாசு கரம்சந்த் காந்தி எழுதிய அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் ஆகும். தன்னுடைய வாழ்வு முழுவதும் ஓர் ஆய்வாளனின் ஆய்வுப் பயணம் போல எனக் குறிப்பிட்டிருக்கும் காந்தி தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தம் வாழ்வின் மறக்க இயலாத பகுதிகளைச் சமூகத்திற்கு ஞாபகப்படுத்த வேண்டிய பாடங்களாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய சோதிடத்தில் பிரீதி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் முதலாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 13° 20' தொடக்கம் 26° 40' பிரீதி யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "பிரீதி" ஆகும்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும். எடுத்துக்காட்டு: 'க்' என்னும் மெய்யும் 'அ' என்னும் உயிரும் சேர்வதால் 'க' என்னும் உயிர்மெய் பிறக்கின்றது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் (18 X 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன.
கிராம ஊராட்சி தமிழ்நாட்டில் 500 க்கு அதிகமான மக்கள் தொகை உள்ள கிராமங்களில் 12,524 கிராம ஊராட்சி மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவைகளின் செயல்பாடுகள் முறையே: கிராம ஊராட்சியின் உறுப்பினர்கள் மக்களால் தேர்தல் மூலமாக நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கிராம ஊராட்சியின் தலைவர் தேர்தல் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள்.
பாபர் மசூதி (Babri Mosque, உருது: بابری مسجد, இந்தி: बाबरी मस्जिद), முதலாவது முகலாய மன்னரான பாபர் என்பவரின் கட்டளையின் பேரில் 16ம் நூற்றாண்டில் இந்தியாவின் அயோத்தி நகரில் எழுப்பப்பட்ட ஒரு மசூதி ஆகும். 1940களுக்கு முன்னர் இது பிறந்த இடத்தின் மசூதி (Masjid-i Janmasthan) என அழைக்கப்பட்டது. இம்மசூதி "ராமாவின் கோட்டை" எனப்படும் குன்றில் அமைந்துள்ளது.
உண்ணாநிலைப் போராட்டம் அல்லது உண்ணாவிரதப் போராட்டம் (Hunger strike) என்பது தன்னை வருத்தி அறவழியில் தமது நியாயங்களை வலியுறுத்தி மாற்றத்தை உடனடியாக வேண்டி மேற்கொள்ளப்படும் ஒரு எதிர்ப்புப் போராட்டம் ஆகும். உண்ணாநிலை என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய செயற்பாடுகள் நிகழவில்லை என்றால் இறப்பு வரை இந்த போராட்டம் நீடிக்கும். இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் சிலர் நீராகாரத்தை ஏற்றுக்கொள்வர்.
சிவன் (Śiva) இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது.
பாபர் மசூதி இடிப்பு (பாபர் மசூதி அழிப்பு; பாபர் மசூதி தகர்ப்பு) என்பது டிசம்பர் 6, 1992 அன்று இந்தியாவின் உத்திரப் பிரதேசத்திலுள்ள, அயோத்தியின் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதியை, இராமர் பிறந்த இடத்தைக் (இராமஜென்மபூமி) கைப்பற்றும் பொருட்டு இந்துக் கரசேவகர்கள் அழித்ததைக் குறிக்கும். இந்த அழிப்பினால் விளைந்த இந்து இஸ்லாமிய மதக்கலவரங்கள் பல மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இவற்றினால் ஏறத்தாழ 2,000 பேர் உயிரிழந்தனர்.
லிசியே நகரின் தெரேசா (Thérèse of Lisieux)(2 ஜனவரி 1873 – 30 செப்டம்பர் 1897) என்பவர் ஒரு பிரஞ்சு கார்மேல் சபைத் துறவியும், கத்தோலிக்க புனிதரும் ஆவார். மரி ஃப்ரான்சுவா தெரேஸ் மார்த்தின் (Marie-Françoise-Thérèse Martin) என்னும் இயற்பெயர் கொண்ட இவர் துறவற சபையில் குழந்தை இயேசு மற்றும் இயேசுவின் திருமுகத்தின் தெரேசா என்னும் பெயரைத் தேர்ந்துகொண்டார். குழந்தை இயேசுவின் தெரேசா என்னும் பெயரும், இயேசுவின் சிறு மலர் என்னும் பெயரும் இவருக்குச் சிறப்புப் பெயர்களாக அமைந்துள்ளன.
கருத்தரிப்பு என்பது, பாலூட்டிகளில், கருக்கட்டல் நிகழ்வின்போது உருவாகும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்த சந்ததிக்கான உயிரி, முளைய விருத்தி மூலம் முளையமாக விருத்தியடைந்து, பின்னர் முதிர்கரு நிலையில் குழந்தை பிறப்புவரை, பெண்களின் இனப்பெருக்க உறுப்பான கருப்பையில் பதிந்து, தாங்கிக் கொள்ளப்படும் நிலையாகும். இந்தக் கட்டுரையில் மனிதரில் நிகழும் கருத்தரிப்பே விரிவாக ஆராயப்படுகின்றது. மனிதரில், பருவமடைந்த ஆரோக்கியமான பெண்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள் உற்பத்தியாகும்.
சிந்துவெளி நாகரிகம் (Indus Valley Civilisation) மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது.
இந்திய வரலாறு (History of India) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் வரலாற்றுக் காலம் முன்பு வாழ்ந்த மக்கள், அவர்தம் சமுதாயம், சிந்து சமவெளி நாகரிகம் இந்தோ-ஆரியப் பண்பாடு உள்ளடக்கிய வேதகால நாகரிகம் தொடங்கி இன்றுவரை உள்ளிட்டகாலம் அடங்கும். மேலும் பல கலாச்சாரங்களின் சாரமாகவும் பண்பாடுகளை உள்வாங்கியும் பிறந்த இந்து சமயம், அதன் வளர்ச்சி குறித்தும் சிரமணா இயக்கத்தின் வளர்ச்சி, சிரவுத்தா பலிகளின் வீழ்ச்சி, சைனம், பௌத்தம், சைவம், வைணவம் மற்றும் சக்தி வழிபாடு இவைகளின் வளர்ச்சி, தாக்கம், மேலும் இப்பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த அரச பரம்பரை, பேரரசுகளின் தோற்றம், தாக்கம், இடைகாலத்தில் தோன்றிய இந்து மற்றும் முகலாய அரச பரம்பரைகள் குறித்த தகவல்கள், பிற்காலத்தில் வந்த ஐரோப்பிய வணிகர்கள், அதன் தொடர்ச்சியாக அமைந்த ஆங்கிலேய அரசு, அதன் தொடர்ச்சியாக எழுந்த விடுதலை இயக்கம், அதன் பின் நாடு பிரிவினை அடைந்து இந்தியக் குடியரசு பிறந்த வரை தகவல்கள் உள்ளிட்டவை அடங்கும்.சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துணைக்கண்டத்தில் இன்றைய மனிதர்களின் உடற்கூறியல் வடிவத்தை ஒத்த மனிதர்களோ அல்லது 5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தற்கால மனிதனின் முன்னோடிகளோ வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிமு 3200 முதல் கிமு 1300 வரை இந்தியாவில் செழிப்பாக விளங்கிய சிந்துவெளி நாகரிகம்தான் தெற்கு ஆசியாவில் தோன்றிய முதல் நாகரிகம் ஆகும்.
புதுக்கவிதை என்பதற்கான வரைவிலக்கணம் என்பது இன்றைய சூழலில் பல்வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. எனினும் இலகுவாக புதுக்கவிதை என்பது கவிதைக்குரிய மரபு, இலக்கணம் அற்ற ஒரு கவிதை முறையாக நோக்கப்படுகின்றது. மரபுக்கவிதையானது சீர், தளை, அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளைக் கொண்டு காணப்பட புதுக்கவிதை அவற்றை புறந்தள்ளியதாக புதுக்தோற்றத்துடன் காணப்படுகின்றது.
ஒலியின் விரைவு அல்லது ஒலியின் வேகம் என்பது ஒரு மீள்தன்மை ஊடகத்தின் வழியே பரவுகின்ற ஒலி அலையானது ஒரு யூனிட் நேரத்திற்குள் பயணித்த தூரம் ஆகும். ஒலியின் வேகம் என்பது ஈரப்பதம் இல்லாத காற்றில் 20 °C (68 °F) வெப்பநிலையில், விநாடிக்கு 343 மீட்டர்கள் (1,125 அடி/வி; 1,235 கி.மீ/நேரம்; 767 மைல்/நேரம்; 667 kn) அல்லது 2.92விநாடிக்கு ஒரு கி.மீட்டர் அல்லது 4.69விநாடிகளில் ஒரு மைல் தூரத்தினை கடக்கும். உன்னத வளிமத்தினல் ஒலியின் வேகமானது, அதன் வெப்பநிலை மற்றும் கலவையால் தீர்மானிக்கப்படுகிறது; மாறாக காற்றில் ஒலியின் வேகமானது காற்றின் அதிர்வெண் மற்றும் அழுத்தத்தினோடு குறைந்த தொடர்பினையை கொண்டிருக்கும்.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் பழங்குடியினர் (36) பட்டியல் சாதிகள் (76) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79)என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்
இந்தியாவில் 28 மாநிலங்களும், டெல்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 8 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, ஜம்மு காஷ்மீர், டெல்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் இந்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுனர்களைக் கொண்ட, குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும்.