The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
நெகிழி அல்லது பிளாஸ்டிக் (Plastic) என்பது ஒரு பொருள் ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுகி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும். "வார்க்கத் தக்க ஒரு பொருள்" என்னும் பொருள் தரும் "பிளாஸ்டிகோஸ்" என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது. நெகிழி என்னும் பொருளானது பிசைவு கொள்ளும் பொருள் ஆகும்.
பகத் சிங் (Bhagat Singh, செப்டம்பர் 28, 1907 – மார்ச் 23, 1931) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மார்க்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவதுண்டு..
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுட்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெகிழி மறுசுழற்சி என்பது ஸ்கிராப் அல்லது கழிவுநெகிழியை மீட்டெடுத்து அசல் வடிவத்தில் இருந்து, சில நேரங்களில் முற்றிலும் வேறுபட்ட பயனுள்ள மறுசெயல்பாடு பொருள்களை தயாரிக்கும் செயல்பாடு ஆகும். உதாரணமாக குளிர்பானம் பாட்டில்களை உருக்கி பின்னர் நெகிழி நாற்காலிகள் மற்றும் மேசைகள் உருவாக்குதல். பொதுவாக ஒரு நெகிழி அதே வகை நெகிழியாக மாற்றப்படுவதில்லை, மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களை பெரும்பாலும் மறுசுழற்சி செய்ய இயலாது.
ஜலியான்வாலா பாக் படுகொலை அல்லது ஜாலியான்வாலா பாக் படுகொலைகள் (Jallianwala Bagh Massacre), அல்லது அமிர்தசரஸ் படுகொலை என்பது வட இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜலியான் என்ற இடத்தில் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 இல் ரெஜினால்ட் டையர் என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் பிரித்தானிய இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட பீரங்கிச் சூட்டு நிகழ்வைக் குறிக்கும். இந்நிகழ்வில் பெண்கள், சிறுவர்கள் நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் நீடித்த இச்சூட்டு நிகழ்வில் மொத்தம் 1650 தடவைகள் அல்லது ஒரு சிப்பாய்க்கு 33 சூடுகள் என்ற முறையில் சுடப்பட்டன.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
சுற்றுலா (tourism) என்பது தமது வழமையான இருப்பிடங்களை விட்டு வேற்று இடங்களைக் கண்டு களிக்க பயணித்தலே ஆகும். உலக சுற்றுலா அமைப்பின் சொற்பொருள் விளக்கத்தின்படி ஒரு பயணத்தை சுற்றுலா என வகைப்படுத்த ஒருவர் தமது "வழமையான சுற்றுச்சூழலைவிட்டு வேற்று இடத்திற்கு ஒய்வு, அலுவல் மற்ற ஏனைய நோக்குடன் மேற்கொள்ளும் பயணம் ஒரு வருட காலகட்டத்திற்குள் அமைய வேண்டும். மேலும், அப்பயணத்தின் மூலம் பயணி பயணிக்கப்பட்ட இடத்திலிருந்து ஊதியம் பெற கூடாது".
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டினர்
இந்திய விடுதலை இயக்கங்களில் பங்கு பெற்ற தமிழ்நாட்டினர் குறித்த பட்டியல் இது. பூலித்தேவன் (1715-1767) மருதநாயகம் (1725-1764) வீரபாண்டிய கட்டபொம்மன் (1790-1799) தீரன் சின்னமலை சாமி நாகப்பன் படையாட்சி வீரன் சுந்தரலிங்கம் அர்த்தநாரீசுவர வர்மா அஞ்சலை அம்மாள் எஸ். எஸ்.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.இவர் 1945 ஆகத்து 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், அல்லது உருசியாவிற்குச் சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆகத்து 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது, போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியது.
கண்ணதாசன் (ஒலிப்பு ) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
பஞ்சாயத்து ஒன்றியம் அல்லது ஊராட்சி ஒன்றியம் (Panchayat Union or Block Development Office), இந்தியாவின், தமிழ்நாட்டில், 1994ம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி சட்டத்தின்படி வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டது.ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் கிராம ஊராட்சிகள் இயங்குகிறது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் 385 ஊராட்சி ஒன்றியங்களும், 12524 கிராம ஊராட்சிகளும் உள்ளது. அவற்றுள் நீலகிரி மாவட்டம் குறைந்த பட்சமாக நான்கு பஞ்சாயத்து ஒன்றியங்களும், விழுப்புரம் மாவட்டம் அதிக பட்சமாக 22 பஞ்சாயத்து ஒன்றியங்களையும் கொண்டுள்ளது.ஊராட்சி ஒன்றியங்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி விரிவாக்க அலுவலர்கள், மேலாளர், கணக்காளர் மற்றும் உதவியாளர்கள் ஊராட்சி ஒன்றியக் குழுவின் தீர்மானங்களை நிறைவேற்றுவார்.
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற குண்டலகேசி என்னும் நூல் ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும். பல்வேறு தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தங்கள் உரைகளிலே குண்டலகேசிப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள். இந்நூலிலிருந்து கிடைத்துள்ள பாடல்கள் அனைத்தும் இவ்வாறு வேறு நூல்களிலிருந்து கிடைத்தவையே.
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 3 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக இவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாகக் கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார்.
முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு, தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்தப் பேச்சாளராகவும், ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக, தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
மழைநீர் சேகரிப்பு என்பது மழை நீரை வீணாக்காமல் சேமித்து வைப்பது ஆகும். மழைநீரைச் சேகரித்து பொதுமக்களின் குடிநீர் தேவைகளுக்கும், கால்நடைகளுக்கும், நீர்ப்பாசனத்திற்கும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கும் பயன்படுத்தலாம். வீடுகள், நிறுவனங்களின் கட்டிடங்களின் மேற்கூரைகளில் இருந்தும் இதற்காகத் தயார் செய்யப்பட்ட தரைவழியாகவும் சேகரிக்கப்படும் மழைநீர் குடிநீருக்கான முக்கியமான ஆதாரமாகப் பயன்படுத்தலாம்.சில சூழ்நிலைகளில், மழைநீர் ஒன்றே எளிதில் கிடைக்கக்கூடிய, சிக்கனமான நீர் ஆதாரம்.
திருப்பூர் குமரன் (Tiruppur Kumaran, அக்டோபர் 4, 1904 – சனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 சனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார்.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் பழங்குடியினர் (36) பட்டியல் சாதிகள் (76) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79)என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
ஊட்டச்சத்து (Nutrition) என்பது வாழ்க்கைக்கு ஆதாரமான அத்தியாவசிய மூலப்பொருள்களை உயிரணுக்களுக்கும், அதன்மூலம் உயிரினங்களுக்கும் வழங்குகின்ற உணவு(food) ஆகும். இது வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், புரதம் ,கொழுப்பு ,என பல ஊட்டக்கூறுகளைக் (Nutrients) கொண்டிருக்கும். பல பொதுவான சுகாதார பிரச்சினைகளையும் ஆரோக்கியமான உணவைக் கொண்டு தடுக்கவோ தவிர்த்து முடியும் .
குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா: கு, சு, டு, து, பு, று) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துகள் (எ.கா: ற, கி, பெ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது. இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.
இந்திய சோதிடத்தில் பிரீதி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான "யோகம்" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் முதலாவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 13° 20' தொடக்கம் 26° 40' பிரீதி யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் "பிரீதி" ஆகும்.
உழவு அல்லது வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனையப் பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான்.
வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் முகமதியர்களின் படையெடுப்புக்குப்பின்பு கம்பிளி ராஜ்ஜியம் இழந்து விஜயநகரம் உருவாக்கினர்.
சிந்துவெளி நாகரிகம் (Indus Valley Civilisation) மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது.
இந்திய விடுதலை இயக்கம் என்பது இந்தியாவில் இரண்டு நூற்றாண்டுகளாக நீடித்த ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியையும் அதனைத் தொடர்ந்து வந்த ஆங்கில அரசின் ஆட்சியையும் முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும் நிகழ்ந்த கலகங்கள், அகிம்சை வழிப் போராட்டங்கள் முதலிய பல்வேறு நிகழ்வுகளை குறிக்கும் ஒரு பரந்துபட்ட வரலாறு ஆகும். இவ்வியக்கம் பிரிக்கப்படாத இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் இருந்து ஆங்கில அரசை விலக்குவது மற்றும் அங்கெல்லாம் சுதந்திர அரசை ஏற்படுத்தி சுய ஆட்சியை நிர்மாணிப்பது முதலிய பல்வேறு நோக்கங்களுக்காக எடுத்து செல்லப்பட்ட இயக்கம் ஆகும். இந்த இயக்கங்களின் ஆரம்பகட்ட எதிர்ப்புகள் 16 ஆம் நூற்றாண்டில் கர்நாடகாவில் போர்த்துக்கீசிய காலனிய விரிவாக்கத்தின் துவக்கத்திலும், 1700-களின் மத்திய காலம் மற்றும் இறுதிக் காலங்களில் வங்காளத்தில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியாலும் செய்யப்பட்ட காலத்திலேயே காணப்படுகின்றன.
இளங்கோ, அல்லது இளங்கோ அடிகள் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை எழுதியவர். இவர் சேர அரசன் செங்குட்டுவனுடைய தம்பியெனவும், இளவரசுப் பட்டத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டவர் எனவும் சொல்லப்படுகின்றது. இவர் சமண சமயத்தைத் தழுவியவராக இருந்தும், தாம் இயற்றிய நூலில் வைணவத் திருமாலையும்,சைவக் கொற்றவையையும் போற்றும் பகுதிகள் அந்தந்த சமயத்தவரால் பெரிதும் போற்றப்படுகின்றன.
பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் இனத்தவர்கள் (Scheduled Castes & Scheduled Tribes) என்ற சமூகத்தவர்கள் கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் தகுதிகளில் இந்திய துணை கண்டத்தில் வரலாற்று ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள். பிரித்தானிய இந்தியாவில், இவர்களை ஒடுக்கப்பட்ட மக்கள் (Depressed Class) என்று வகைப்படுத்தி, அவர்களது பொருளாதார மேம்பாட்டிற்கு பஞ்சமி நிலங்கள் ஒதுக்கப்பட்டது. மகாத்மா காந்தியும், அவர்பால் ஈர்க்கப்பட்ட என்.
சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்.இவர் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது, சிவபெருமான் கிழவனாகச் சென்று தடுத்தார். பின்பு, சுந்தரரின் பிறவி நோக்கம், 'சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவது' எனப் புரிய வைத்தார். இதனைத் தடுத்தாட்கொள்ளுதல் எனச் சைவர்கள் கூறுகிறார்கள்.
கல்வி (Education) என்பதுக் குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
நீர் சுழற்சி (Water cycle) என்பது பூமியின் மேற்பரப்புக்கு மேலேயும் கீழேயும் தொடர்ச்சியாக இயங்கும் நீரின் இயக்கத்தைக் குறித்த செயல்பாடாகும். ஐதரலாசிக்கல் சுழற்சி ஐதரலாசிக் சுழற்சி என்ற பெயர்களாலும் நீரின் சுழற்சி அறியப்படுகிறது. பூமியிலுள்ள நீரின் அளவு காலப்போக்கில் தொடர்ந்து நிலையாகவே இருந்து வருகிறது.
மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள்.
இலக்கியம் (ஒலிப்பு ) என்பது விரிந்த பொருளில் எழுதிய அனைத்தையும் குறிக்கும். இந்த வரையறையின் கீழ் இலக்கியத்தை இரு வகைகளாகப் பிரிக்கலாம்: இன்பியல் இலக்கியம் அறிவியல் இலக்கியம்'இன்பியல்' இலக்கியம் "கற்போர் உள்ளத்துக்கு இன்பம் தரும் நூல்கள்". அறிவியல் இலக்கியம் கற்போருக்கு அறிவை முதன்மையாகத் தரும் இலக்கியம்.
தமிழ் இலக்கணத்தில் வழக்கு என்பது மக்களின் பேச்சு வழக்கிலும், இலக்கிய வழக்கிலும் சொற்கள் வழங்கப்படும் முறை அல்லது பயன்படுத்தப்படும் முறை ஆகும். நம் முன்னோர்கள் எந்தப் பொருளை எந்தச் சொல்லால் வழங்கி வந்தனரோ நாமும் அவ்வாறே வழங்கி வருவதைக் குறிக்கும். வழக்கு என்பது மரபு அல்லது பழக்கம் என்ற பொருளிலும் கையாளப்படுகிறது.
இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியும் ஆவார். இந்திய ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் எனக் குறிப்பிடப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் வாயிலாக இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் மரபுசார்ந்த ஒன்றாகும்.
தூய இந்தியா இயக்கம் (Clean India Mission, அலுவல் முறையாக சுவச்ச பாரத் அபியான், Swachh Bharat அல்லது Swachh Bharat Abhiyan) நாட்டின் 4041 நகரங்களில் உள்ள சாலைகள், கட்டமைப்புக்களை தூயப்படுத்துவதற்காக இந்திய அரசு துவக்கியுள்ள இயக்கமாகும்.இந்த இயக்கத்தை அக்டோபர் 2, 2014 அன்று புது தில்லியில் ராஜ்காட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைத்தார். காந்தி தங்கியிருந்த இல்லத்திற்கு வெளியே சாலையை சுத்தப்படுத்தி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 3 மில்லியன் அரசுப் பணியாளர்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பங்கேற்கும் இத்திட்டமே இந்தியாவின் மிகப் பெரும் தூய்மை இயக்கமாகும்.
ஒத்துழையாமை இயக்கம் (Non-cooperation movement) என்பது பிரித்தானிய இந்தியாவில் காலனிய அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட நாடளாவிய மக்கள் இயக்கமாகும். இந்திய விடுதலை போராட்டத்தில் இது ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. மகாத்மா காந்தியாலும் இந்திய தேசிய காங்கிரசாலும் முன்னெடுக்கப்பட்ட இவ்வியக்கம் செப்டம்பர் 1920 இல் தொடங்கி பெப்ரவரி 1922 வரை தொடர்ந்தது.
இலங்கை (ஒலிப்பு ) (Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා, சிறீலங்கா) இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.
கருணை (Kindness) என்பது நன்நெறி, இனிய மனநிலை மற்றும் மற்றவர்களுக்காக கவலை கொள்ளும் மன நிலையைக் குறிக்கும் ஒரு நடத்தை ஆகும். இது ஒரு நல்லொழுக்கம் எனவும் அறியப்படுகிறது, பல மதங்களில் மதிப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அரிஸ்டாட்டில், அவரது "சொல்லாட்சிக் கலை" (Rhetoric) புத்தகத்தின் இரண்டாம் பாகத்தில், தேவைக்கேற்றவாறு உதவுவதும், எதையும் எதிர்பாராமல் உதவுவதும், உதவி பெறுபவரின் நன்மையைக் கருதி செய்வது கருணை" என வரையறுக்கிறார்.
சினைப்பை நோய்க்குறி (Polycystic ovary syndrome)(PCOS) என்பது பெண்களுக்கு ஆண்ட்ரோஜன் எனப்படும் ஆண்தன்மைச் சுரப்பி அதிகரிப்பதன் காரணமாக ஏற்படும் ஒரு கூட்டு நோய் அறிகுறியாகும். ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் இல்லாமலிருத்தல், அதிகமான குருதிப்போக்கு, உடலிலும் முகத்திலும் அதிகமான முடிவளர்ச்சி, முகப்பரு, இடுப்பெலும்பு வலி, மலட்டுத்தன்மை, சில தோல் பகுதிகள் மட்டும் கெட்டியாகவும் கருத்தும் மிருதுவாகக் காணப்படுதல் ஆகியன இதன் அறிகுறிகளாகும். மேலும் இதனோடு நீரிழிவு நோய், உடற் பருமன் இதய நோய் , உறங்கும்போது மூச்சு விடுதலில் மாற்றம், சீரற்ற மனநிலை, கருப்பை அகப்படலப் புற்றுநோய் ஆகியவையும் இதனோடு தொடர்புடையனவாகும்..