The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
புதினம் அல்லது நாவல் என்பது மக்களால் பரவலாக விரும்பப்படும் ஒரு இலக்கிய வடிவம் ஆகும். இதில் வாழ்க்கையும், நிகழ்வுகளும் கற்பனையாக உரைநடையில் எழுதப்படுகின்றன. தற்காலப் பயன்பாட்டில் புதினம், நீளமாக இருத்தல், புனைகதையாக அமைதல், உரைநடையில் எழுதப்படல் போன்ற இயல்புகளால் ஏனைய இலக்கிய வடிவங்களிலிருந்து வேறுபடுத்தப்படுகின்றது.
2019 புல்வாமா தாக்குதல் என்பது இந்தியாவின், சம்மு காசுமீர், புல்வாமா மாவட்ட அவந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், மத்திய சேமக் காவல் படையினர் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது 2019 பிப்ரவரி 14 ஆம் நாள் நடந்த தற்கொலைத் தாக்குதல் ஆகும். இத்தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினரும், தற்கொலை தீவிரவாதி ஒருவரும் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு ஜெய்சு-இ-முகமது என்ற தீவிரவாதக் குழு பொறுப்பேற்றது.
புனித வேலன்டைன் நாள் (Saint Valentine's Day) அல்லது பொதுவாக வேலன்டைன் நாள் (Valentine's Day) உலகம் முழுவதிலுமுள்ள மிக நெருங்கிப் பழகும் மக்கள் பலராலும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள்.
சுற்றுச்சூழல்அல்லதுஉயிரியற்பியல் சூழல் (Biophysical environment) என்பது ஒரு உயிரினத்தை அல்லது மக்கள் தொகையைச் சுற்றியுள்ள உயிர் உள்ள, மற்றும் உயிரற்ற கூறுகள் அனைத்தையும், அவற்றின் விளைவாக குறிப்பிட்ட உயிரினம் அல்லது மக்கள் தொகையின் பிழைப்புத்திறன், விருத்தி, படிவளர்ச்சி அல்லது கூர்ப்பு ஆகியவற்றில் தாக்கம் செய்யக்கூடிய அனைத்துக் காரணிகளையும் உள்ளடக்கிய இயற்கைச் சூழலைக் குறிக்கின்றது. உயிரியற்பியல் சூழலானது நுண்ணோக்கி நிலையிலிருந்து, உலகளாவிய நிலைவரை வேறுபட்ட அளவுகளில் ஆராயப்படலாம். அத்துடன் சூழலின் இயல்பைப் பொறுத்து பெருங்கடல் சூழல், வளிமண்டலச் சூழல், நிலச் சூழல் போன்ற பல வேறுபட்ட சூழல்களைக் காணலாம்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
திருக்குறள், சுருக்கமாகக் குறள் (ஆங்கிலம்: Tirukkuṟaḷ), ஒரு தொல் தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது. இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது.
உயிரியல் பல்வகைமை அல்லது பல்லுயிரியம் அல்லது உயிரினப் பன்மயம் (Biodiversity, இலங்கை வழக்கு: உயிர்ப் பல்வகைமை) என்பது பூமியில் உள்ள நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய கணக்கிலடங்காத உயிரினங்களில் காணப்படும் வேறுபாடு ஆகும். மரபுவழிப் பண்பில் பல்வகை, சிற்றினங்களில் பல்வகை, சூழல் அமைப்பில் பல்வகை, ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு உரித்தான பல்வகை, அறிமுகப்படுத்தப்பட்ட உயிரினங்களில் பல்வகை ஆகியவற்றை உயிரியல் பல்வகைமை என்பது குறிக்கும். உயிரியல் பல்வகைமை என்பது புவியின் எல்லாப் பகுதிகளிலும் பல்வேறு சூழல்களில் வாழும் பலவகையான உயிரினங்களைப் பற்றி விவரிக்கப் பயன்படுத்தும் ஒரு சொல்லாகும்.
உணவுச் சங்கிலி (food chain) என்பது, ஒரு குறிப்பிட்ட சூழலில் வாழ்கின்ற உயிரினங்களுக்கு இடையிலான உணவுத் தொடர்பினை விளக்கும் சொற்றொடராகும். ஓர் வாழிடச் சூழல் வாழ்முறையில் ஓர் உணவு மட்டத்திலிருந்து மற்றொரு உணவு மட்டத்திற்கு உணவும், ஆற்றலும் கடத்திச் செல்லப்படுவதை உணவுச் சங்கிலி விளக்குகிறது. உண்மையில், உணவுச் சங்கிலி தொடர்புகள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றன.
கார்லசு புச்திமோன் (Carles Puigdemont i Casamajó; பிறப்பு: 29 திசம்பர் 1962) ஸ்பெயினின் காத்தலோனியா தன்னாட்சிப் பகுதியின் தலைவர் ஆவார்.2017-ஆம் ஆண்டில் காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தலில் கார்லஸ் புய்க்ரெமாண்ட்டின் அரசியல் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இவர் ஸ்பெயினிலிருந்து, காத்தலோனியா தன்னாட்சிப் பிரதேசத்தை தனி நாடாக கோரும் போராட்ட இயக்கத்தின் தலைவரும் ஆவார்.
சுற்றுச்சூழல் நாற்கூம்பு அல்லது சுற்றுச்சூழல் பிரமிடு (ecological pyramid) என்பது கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழலில் ஒவ்வொரு சூழ்நிலை மண்டல மட்டத்திலும் உயிரினத்தொகுதி (பயோமாஸ்) அல்லது உயிர் உற்பத்தித்திறனைக் காட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு வரைகலை அமைப்பு ஆகும். இது சூழ்நிலை மண்டல பிரமிடு, எல்டோனியன் பிரமிடு, ஆற்றல் பிரமிடு, அல்லது சில நேரங்களில் உணவு பிரமிடு (trophic pyramid, eltonian pyramid, energy pyramid, food pyramid) எனவும் அழைக்கப்படுகிறது. ”பயோமாஸ் பிரமிடுகள்” எத்தனை உயிரினங்கள் (ஒரு உயிரினத்தில் வாழும் உயிரினம் அல்லது உயிரினத்தின் அளவு) ஒவ்வொரு சூழ்நிலை மண்டல மட்டத்திலும் உள்ளன என்பதைக் குறிப்பிடுகின்றன.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
'இறக்கைகள் கொண்ட இருகாலி'யைப் பறவை எனக் கூறுவர். பறவைகள் முதுகெலும்புடைய இளஞ்சூட்டுக் குருதியுடைய, இறகுகளுடைய, முட்டையிட்டு இனம்பெருகும் விலங்குகளை குறிக்கும். பறவைகள் இருகால்கள் உள்ள, தன் உடல்வெப்பம் காக்கும், முதுகெலும்புள்ள (முள்ளந்தண்டுள்ள) புள் என்றும் குரீஇ என்றும் சிறப்பித்துக் கூறும் வகையைச் சேர்ந்த, முட்டையிடும் விலங்குகள் ஆகும்.
சுற்றுச்சூழல் மாசுபாடு அல்லது சூழல் மாசடைதல் (Pollution) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும். சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது.
சூழல் மண்டலம் (ecosystem, இலங்கை வழக்கு: சூழற்றொகுதி) என்பது, ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியிலுள்ள உயிரற்ற இயற்பியல் கூறுகளுடன் ஒருமித்துச் செயற்படும் எல்லாத் தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகள், நுண்ணுயிர்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய உயிரினங்களையும் இணைத்த ஒரு இயற்கை அலகு ஆகும். உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தாங்கள் வாழும் இடத்தின் சூழலைப் பொறுத்து, ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்தில் காணப்படும் உயிருள்ள இனங்களும், உயிரற்ற இயற்பியல் கூறுகளும், அவற்றிற்கிடையிலான இடைவினைகளும் இணைந்து சூழல் மண்டலம் எனப்படும்.
முதல் உலகப்போர் என்பது உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர். எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன.
. இயற்பியலில் ஆற்றல் / சக்தி (energy, கிரேக்க மொழியில் ἐνέργεια – energeia, "செயற்பாடு, ἐνεργός – energos, "சுறுசுறுப்புடன் செயற்படுதல்") ) என்பது வேலை செய்யத்தகு அளவு என்று எளிமையாக வரையறை செய்வர். அதாவது ஒரு பொருளின் ஆற்றல் அதனால் செய்ய இயலும் வேலையின் அளவைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஆனால் ஒருவகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு (environmental protection) என்பது சுற்றுச்சூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகை பெருக்கத்தினாலும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்றுச்சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
நா.பார்த்தசாரதி (Na. Parthasarathy, டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார்.
புல்வெளி அல்லது புன்னிலம் என்பது பரந்துவிரிந்த ஓரளவு தட்டையான புல் நிலப்பகுதியாகும். சில மில்லிமீற்றர் உயரப் புற்கள் முதல் 2.1 மீற்றர் உயரமும் 1.8 மீற்றர் வேர்நீளமும் கொண்ட புற்கள் ஈறாகப் பலவகையான புற்களைக் கொண்ட புல்வெளிகள் உலகில் காணப்படுகின்றன. புல்வெளி என்பது புற்கள் மற்றும் மரம் அல்லாத சிறு தாவரஙகள் வாமும் இடமாகும்.
தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் எனச் சித்தரிக்கப்படும் சங்க காலம் தமிழ்ப் புலவர்கள் நிறைந்து வழிந்த காலம். அக்காலத்தில் ஆண்பாற் புலவர்களுக்குச் சளைக்காமல் பெண்பாற் புலவர்களும் இலக்கிய ஆளுமை மிக்கவர்களாகக் காணப்பட்டனர். சிறந்த பல தனிப்பாடல்களை, தொகுப்புக்களை இப்பெண்பாற் புலவர்கள் தமிழ் உலகுக்கு ஈந்தபோதும் அவர்களின் இயற்பெயர் அத்தொகுப்புக்களிலோ, தனிப்பாடல்களிலோ ஈண்டு குறிப்பிடப்படவில்லை என்பதை இலக்கியங்களை ஆராயும்போது தெளிவாகிறது.
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
வெள்ளம் என்பது நிலத்தை மூழ்கடிக்குமளவுக்குத் தேங்கி நிற்கும் அல்லது பொங்கிப் பாய்ந்தோடும் நீர் ஆகும்.ஆறு அல்லது ஏரி போன்ற நீர்நிலைகளில் உள்ள நீர் மிகையாகும் போது அல்லது கரை உடையும் போது அது தனது வழக்கமான எல்லைகளைத் தாண்டுகிறது. நீரோட்டத்தின் வலிமையானது மிகவும் அதிகரிக்கின்ற போது ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அது ஆற்றின் பாதையைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடி கரையோரம் ஒட்டி அமைந்துள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனகளுக்கு சேதம் உண்டாக்குகிறது.
வைணவ சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய திருமாலைப் போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள் ஆவர். தென்மொழியாம் தமிழ் மொழியில் வைணவ இலக்கியங்களை வளர்த்தவர்கள் பரம்பரையில், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர். அவர்களுள், இறைவனை இறைவனாகக் காணாது, இறைவனோடு உறவுமுறையில் வாழ்ந்ததால் ஆண்டாளையும், இறைவனைப் பாடாது ஆசானைப் பாடினார் என்பதால் மதுரகவியாழ்வாரையும் வேறு வரிசையில் தொகுத்து, ஆழ்வார்கள் பதின்மர் 10 பேர் மட்டுமே எனக் காட்டுவாரும் உண்டு.
வறட்சி அல்லது வரட்சி என்பது ஒரு வரண்ட காலகட்டத்தைக் குறிக்கும். நீண்ட காலத்திற்கு மழைவீழ்ச்சி (பொழிவு) கிடைக்கமையால் ஏற்படுகின்ற சூழல் நிலைமையை வரட்சி என்று எளிமையாக வரைவிலக்கணப்படுத்தலாம். ஆயினும் வரட்சி பற்றிய திட்டமான வரையறை காலத்துக்குக் காலம், நாட்டுக்கு நாடு, பிரதேசத்திற்குப் பிரதேசம்# வேறுபடுகிறது.
பிரெஞ்சுப் புரட்சி (French Revolution, பிரெஞ்சு: Révolution française; 1789–1799) பிரான்சு மற்றும் பிற ஐரோப்பியப் பகுதிகளில் பண்பாடு மற்றும் அரசியல் களங்களில் நிகழ்ந்த பெரும் மாற்றங்களைக் குறிக்கிறது. இதன் விளைவாகப் பிரான்சில் பல நூற்றாண்டுகளாக நீடித்திருந்த முழு மன்னராட்சி முறை வீழ்ந்தது. நிலமானிய, நிலபிரப்புத்துவ, கிறித்தவ திருச்சபை அதிகார முறைமைகளின் ஆதிக்கம் சரிந்து, பிரெஞ்சு சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன.
வல்லினம் மிகும் இடங்கள் என்பது தமிழ் மொழியில் அடுத்தடுத்து இரண்டு சொற்கள் வரும்போது முதல் சொல்லின் (நிலைமொழி) இறுதியில் ஒரு வல்லின எழுத்துச் சேர்வதைக் குறிக்கும். ஒரு நிலைமொழியோடு வருமொழி க, ச, த, ப வருக்க எழுத்துகளில் தொடங்குஞ் சொல்லாக அமையும்பொழுது அவ்வல்லொற்று சிலவிடங்களில் மிகுந்தும் சிலவிடங்களில் மிகாமலும் வரும். இவற்றையறிந்து பயன்படுத்தாமையைச் சந்திப்பிழையெனக் கூறுவர்.
முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, அரபு மொழி: محمد, பிறப்பு கிபி 570, இறப்பு 8 சூன் கிபி 632 கணிப்பு), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்தவர். அராபியத் தீபகற்பம் முழுமையையும் இசுலாம் என்ற ஒரே கொள்கைச் சமயத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர் முஸ்லிம்களால் மட்டுமல்லாமல் பாபிஸ்துகள் மற்றும் பகாய் சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்று போற்றப்படுகிறார்.
கடலில் ரசாயனங்கள், தூசிதுகள்கள், கழிவுப் பொருட்கள், மற்றும் வீட்டுக் கழிவுகள், பரவுவதால் தீங்கான விளைவுகளுக்கான சாத்தியங்கள் நேருவதை கடல் மாசுபாடு என்கிறோம். கடல் மாசுபாட்டுக்கான அநேக ஆதாரவளங்கள் நில அடிப்படையிலானவை. காற்றில் அடித்து வரப்படும் குப்பைகள் போன்ற ஆதாரங்கள் தான் மாசுபாட்டுக்கான ஆதாரங்களாய் பலசமயங்களில் இருக்கின்றன.
பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை
பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை (Pallava art and architecture) என்பது ஆரம்ப காலத்திய திராவிட கலை மற்றும் கட்டிடக் கலையைச் சேர்ந்தது, இது சோழப் பேரரசின் காலத்தில் அதன் முழு உச்சத்தை எட்டியது. தென்னிந்தியாவின் முதல் கல் மற்றும் குடைவுக் கோயில்கள் பல்லவர் ஆட்சியின் போது கட்டப்பட்டன. அவை அதற்குமுன் கட்டப்பட்டிருந்த செங்கல் மற்றும் மரத்தால் கட்டப்பட்ட கட்டடங்களை முன்மாதிரிகளாகக் கொண்டு அமைக்கப்பட்டன.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அஃது ஒரு மகாயான காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மகாயான பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவை இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
உழவு அல்லது வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து கொள்கிறான்.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
விசை (Force) என்பது ஒரு பொருளை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தவோ அல்லது சீரான விரைவுடன் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் நகர்ச்சியின் விரைவை மாற்றவோ வல்ல ஒன்றாகும். சுருக்கமாகக் கூறின் ஒரு பொருளின் நகர்ச்சியில் மாற்றம் ஏற்படுத்துவதை விசை என்கிறோம். விசை இல்லாமல் ஒரு பொருள் தன் நிலையில் இருந்து மாறாது.
பொருளாதாரம் (economy) என்பது நாட்டின் அறியப்பட்ட பொருளாதார அமைப்பையோ இதர நிலப்பகுதியையோ கொண்டுள்ளது. அப்பகுதியின் சமூக ரீதியாக உற்பத்தியில், பரிமாற்றத்தில், விநியோகத்தில் மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளின் நுகர்வில் பங்கேற்கும் பொருளாதாரக் காரணிகளையும் கொண்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட பொருளாதாரம் என்பது அதன் தொழில் நுட்ப பரிணாமம், வரலாறு மற்றும் சமூக நிறுவனம் ஆகியன அடங்கியுள்ள ஒரு வழிமுறையின் இறுதி விளைவுகளையும்; அதேபோல அதன் புவியியல், இயற்கை வளக் கொடை மற்றும் சூழல் ஆகியவற்றை முக்கியக் காரணிகளாக உள்ளடக்கியுள்ளது.
கங்கைகொண்ட சோழபுரம் (ஆங்கிலம்:Gangaikonda Cholapuram) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூர் சோழர்களின் பெருமரசை நிறுவிய முதலாம் இராஜராஜ சோழன் மகனான இராசேந்திர சோழனால் உருவாக்கப்பட்டு 250 ஆண்டுகள் பிற்கால சோழ பேரரசின் தலைநகரமாக விளங்கியது. இங்கு இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவாலயம் இன்றும் உள்ளது.
வெப்ப மாசுபாடு என்பது சுற்றுப்புற நீரின் வெப்பநிலையை மாற்றுகின்ற ஏதேனும் செயல்பாட்டின் மூலமாக நீரின் தரத்தில் ஏற்படும் குறைபாடாகும். மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தொழில்துறை உற்பத்தியாளர்களின் மூலமாக குளிர்விப்பானாக நீரைப் பயன்படுத்தப்படுவதே வெப்ப மாசுபாட்டின் பொதுவான காரணமாகும். குளிர்விப்பானாகப் பயன்படுத்தப்பட்ட நீரானது அதிகப்படியான வெப்பநிலையில் இயற்கை சூழ்நிலைக்குத் திரும்புகிறது.
தமிழ் (Tamil language) தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரின் தாய்மொழி ஆகும். தமிழ், திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் (Local government bodies in Tamil Nadu) என்பது இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தின் ஊர்களை அந்த ஊரின் மக்கள் தொகை மற்றும் வருவாய்க்கு ஏற்பப் பிரிக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரிவுகளைக் குறிக்கும். இந்திய அரசியலைப்புச் சட்டம் பகுதி IV ல் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அதிகாரங்கள் பொறுப்புகள் வழங்கப்பட்டன. தமிழகத்தில் ஊராட்சிகள் சட்டம் 1994 இயற்றப்பட்டு, 1994 ஏப்ரல் 22ம் தேதி நடைமுறைக்கு வந்தது.
பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் இலக்கியத்தில் வழங்கும் பிரபந்த நூல் வகைகளுள் ஒன்று. புலவர்கள் தாம் விரும்பிய தெய்வங்கள், சமயா சாரியர்கள், புலவர் பெருமக்கள், ஆதீனகர்த்தர், அரசர், உபகாரிகள், அவர் அவர்கட்கு உகந்தவர்கள், ஆகியோரைக் குழந்தையாக உருவகித்துக் கற்பனை பல அமையப் பாடப்படுவது பிள்ளைத்தமிழாகும். குழந்தையாகக் கொண்டது பாவனையே ஆகும்.
தமிழ்நாடு அமைச்சரவை (Tamil Nadu Council of Ministers), தமிழ் நாட்டின் அரசு நிர்வாகத்தை செயல்படுத்தும் செயலாட்சியர்கள். முதலமைச்சர் தலைமையில் இயங்கும் செயலாட்சியர்கள் அடங்கிய குழு அமைச்சரவை எனப்படும். சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஆளுநரால் ஆட்சிப் பொறுப்பேற்கும்படி அழைக்கப் பெறுகிறார்.
ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln, பெப்ரவரி 12, 1809 — ஏப்ரல் 15, 1865) ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபாசாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
சர் சார்லஸ் உட்ஸ் என்பவா் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாடு வாரியம் தலைவர், இவா் இந்தியாவில் கல்வி பரப்பி ஒரு முக்கியமான விளைவு ஏற்படுத்தக்கூடிய ஒரு அறிக்கையை 1854 இல் இந்திய கவா்னா் ஜெனரல் டல்ஹெளசி பிரபுக்கு அனுப்பினாா். உட்ஸ் அறிக்கையானது வட்டார மொழிகளை ஆரம்பப் பள்ளிகள் பின்பற்ற வேண்டும், உயர்நிலை பள்ளிகள் ஆங்கிலோ வட்டார மொழிகளிலும், கல்லூரி அளவில் ஆங்கில வழிக் கல்வி கடைப்பிடிக்க வேண்டும் என்றது. இதை உட்ஸ் அறிக்கை எனலாம்.
கிறித்தோபர் கொலம்பசு (Christopher Columbus) (1451–1506) இத்தாலிய நாடுகாண் பயணியும் வணிகரும் காலனித்துவவாதியும் ஆவார். இவர் 1492-இல் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்காவை (எசுப்பானியா நாட்டுக் கொடியுடன்) வந்தடைந்த முதல் ஐரோப்பியர் ஆவார். அவர் இத்தாலியின் செனோவா என்ற குடியரசைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.எசுப்பானியப் பேரரசின் கத்தோலிக்க பேரரசர்களின் ஆட்சியில் கொலம்பசு நான்கு கடற்பயணங்களை அத்திலாந்திக்கு பெருங்கடலைக் கடந்து மேற்கொண்டுள்ளார்.
தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் பட்டியல்
தமிழ்நாட்டின் தற்போதைய பயன்பாட்டிலுள்ள தமிழ் மொழியில் இந்தி, தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், பாரசீகம், அரபு, உருது, மராட்டியம், ஆங்கிலம் என பல்வேறு மொழிச் சொற்கள் கலந்து போய் விட்டன. இவை தமிழ்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சொற்களாகவும் கூட இருக்கின்றன. அப்படி தமிழில் கலந்திருக்கும் பிற மொழிச் சொற்களை குறிப்பிட்ட தலைப்புகளின் வழியாக இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
கண்ணதாசன் (ஒலிப்பு ) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்
1975ல் முதல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியதில் இருந்து இதுவரை ஐம்பதிற்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை இந்தியா ஏவியுள்ளது. இந்திய, அமெரிக்க, உருசிய, ஐரோப்பிய ராக்கெட்டுகளின் மூலமும் அமெரிக்க விண்வெளி ஓடத்தின் துணைக்கொண்டும் இவை செலுத்தப்பட்டுள்ளன. இந்திய செயற்கைக்கோளின் பொறுப்பாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் உள்ளது.
வியன்னா மாநாடு என்பது, 1814 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதல் 1815 ஆண்டு யூன் மாதம் வரையில், ஆசுத்திரிய அரசியலாளர் கிளெமென்சு வென்செல் வொன் மெட்டெர்னிச் (Klemens Wenzel von Metternich) தலைமையில் நடந்த ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்களுக்கான மாநாடு ஆகும். பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள், நெப்போலியப் போர்கள், புனித ரோமப் பேரரசு கலைப்பு போன்றவற்றினால் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வு ஒன்றை எட்டுவதே இந்த மாநாட்டின் நோக்கம். இந்த மாநாட்டின் விளைவாக ஐரோப்பாவின் அரசியல் நிலப்படம் பல மாற்றங்களுக்கு உட்பட்டது.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் அல்லது ஐக்கிய அமெரிக்கா, (United States of America / USA / US) பொதுவாக அமெரிக்கா என அழைக்கப்படுகிறது. இது ஐம்பது மாநிலங்களும் ஓர் கூட்டரசு மாவட்டமும் ஐந்து தன்னாட்சி ஆட்பகுதிகளையும் மற்றும் பல துய்ப்புரிமை உடைய பகுதிகளையும் கொண்ட கூட்டாட்சி அரசியல் சட்ட குடியரசு நாடாகும். 3.8 மில்லியன் சதுர மைல்கள் (9.8 மில்லியன் கிமீ2) பரப்பும் 325 மில்லியன் மக்களும் கொண்ட ஐக்கிய அமெரிக்கா உலகின் பரப்பினடிப்படையில் மூன்றாவது- அல்லது நான்காவது-மிகப்பெரும் நாடாகவும் மூன்றாவது-மிகுந்த மக்களதொகை உள்ள நாடாகவும் திகழ்கிறது.
தொல்லியல் (Archaeology) என்பது பொருள்சார் பண்பாட்டை அகழ்ந்தெடுத்து தொன்மைக்கால மாந்தர் செயல்பாட்டைப் பகுப்பாய்வு செய்யும் அறிவியல் புலமாகும். இவ்வகைப் பொருள்சார் பண்பாட்டுத் தொல்லியல் ஆவணங்களில் கட்டிடக்கலை, தொல்பொருட்கள், தொல்லுயிர் எச்சம், மனித எச்சங்கள், சூழலியல் எச்சங்கள் ஆகியன உள்ளடங்கும். எனவே தொல்லியலை சமூகவியல் கிளைப்புலமாகவும் மாந்தவாழ்வியல் கிளைப்புலமாகவும் (humanities) கருதலாம்.
கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
1940 களில் அறிமுகப்படுத்தப்பட்ட பயிர்செய்கை நுட்பங்கள் வேளாண் உற்பத்தியை பன்மடங்கு பெருக்கின. இந்த வேளாண் தொழில்நுட்பமும், அதனால் நிகழ்ந்த சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களும் பசுமைப் புரட்சி (Green Revolution) எனப்படுகிறது. இந்தியா போன்ற பல மூன்றாம் நிலை நாடுகள் பட்டினிச் சாவை எதிர்நோக்கிய அன்றைய கால கட்டத்தில் பசுமைப் புரட்சி முன்னிறுத்திய பயிர்ச்செய்கை முறைகள் பலன் தந்தது.
இயற்கை வளங்கள் (natural resources), அல்லது பொருளாதார ரீதியில் நிலம் மற்றும் மூலப்பொருள் அல்லது கச்சாப் பொருட்கள் எனப்படுபவை ஒப்பிட்டளவில் மனிதத் தலையீடுகளின்றித் தன் இயல்பு நிலையில் சூழல் தொகுதிகளில் காணப்படும் பொருட்கள் ஆகும். இயற்கை வளங்கள் சுற்றுச்சூழலிலிருந்து தருவிக்கப்படுபவை. இவற்றில் பெரும்பான்மையானவை நம் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவையாகவும் தேவைகளுக்குப் பயன்படக்கூடியவைகளாகவும் அமைகின்றன.
நீர் மாசடைதல் அல்லது நீர் மாசுபாடு என்பது, ஏரிகள், ஆறுகள், கடல்கள், நிலத்தடி நீர் என்பன போன்ற நீர் நிலைகள் மனித நடவடிக்கைகளால் தூய்மை இழப்பதைக் குறிக்கும். நீரின் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகளில் மாறுதல்கள் நிகழ்வதனால் நீர் மாசுபாடு ஏற்படுகின்றது. இது அந்த நீர் நிலைகளில் வாழும் விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.