The most-visited தமிழ் Wikipedia articles, updated daily. Learn more...
ஏபிஓ குருதி குழு முறைமை (ABO blood group system) என்பது, மனிதரில் குருதி மாற்றீட்டில் பயன்படும் மிகவும் முக்கியமான குருதிக் குழு முறைமை ஆகும். குருதி வகை களில் வேறுபட்டுக் காணப்படும் குருதிச் சிவப்பணுவில் உள்ள பிறபொருளெதிரியாக்கிகள், குருதித் தெளியத்தில் காணப்படும் பிறபொருளெதிரிகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த குருதிக் குழு முறைமை இயங்குகின்றது. இதனுடன் தொடர்புடைய எதிர்-A பிறபொருளெதிரி (Anti-A Antibody) மற்றும் எதிர்-B பிறபொருளெதிரி பொதுவாக IgM (Immunoglobulin M) வகை பிறபொருளெதிரிகள் ஆகும்.
பிரான்சிஸ் வில்லியம் ஆஸ்டன் (Francis William Aston, எஃப்.ஆர்.எஸ்; 1 செப்டம்பர் 1877 - 20 நவம்பர் 1945) என்பவர் ஒரு ஆங்கில வேதியியலாளர் மற்றும் இயற்பியலாளர் ஆவார். இவர் 1922 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார், பொருள்களில் அடங்கியுள்ள அணுக்களின் எடையை அவற்றின் நிறைகளுக்கேற்பக் கணக்கிடப் பயன்படும் 'நிறைநிரல் வரைவி'யை முதன்முதலாகக் கண்டு பிடித்தவர் இவரே. அத்துடன் 'ஐசோடோப்' என அழைக்கப்படும் ஓரகத் தனிமங்களையும் இவரே கண்டறிந்து விளக்கினார்.
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.
பாரதிதாசன் (Bharathidasan, ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் 'கனகசுப்புரத்தினம்' ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், 'பாரதிதாசன்' என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகளை "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக" கருதப்படுகின்றன.
பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம் , வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் ‘சிறுகாப்பியம்’ எனப்பட்டன. உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, இரீயூனியன், திரினிடாடு போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது.
கண்ணதாசன் (ஒலிப்பு ) (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர்.
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைக்கப்படுகிறார்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச் சங்க காலமான கி.மு.400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகை எனும் நூலை முதல் நூலாக கொண்டும். சுந்தரமூர்த்தி சுவாமிகளை காப்பிய தலைவராக கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார்.
இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், 38 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் மாவட்ட நிர்வாகப் பணிகள் கவனிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன.
உலக மனித உரிமைகள் சாற்றுரை (Universal Declaration of Human Rights) என்பது, 1948 ஆம் ஆண்டில் பாரிசில் உள்ள சைலட் மாளிகையில் வைத்து, ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சாற்றுரை ஆகும். கின்னஸ் பதிவுகள் நூல், இதனை மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட ஆவணம் எனக் குறிப்பிடுகிறது. இச் சாற்றுரை இரண்டாம் உலகப் போரில் இருந்து பெற்ற பட்டறிவுகளிலிருந்து உருவானது.
முகம்மது நபி அல்லது முகம்மது (Muḥammad, அரபு மொழி: محمد, பிறப்பு கிபி 570, இறப்பு 8 சூன் கிபி 632 கணிப்பு), அராபியப் பெயர்: அபூ அல்-காசிம் முகம்மது இப்னு அப்தல்லா இப்னு அப்தல்-முத்தலிப் இப்னு ஹாசிம் (Abū al-Qāsim Muḥammad ibn ʿAbd Allāh ibn ʿAbd al-Muṭṭalib ibn Hāshim, ابو القاسم محمد ابن عبد الله ابن عبد المطلب ابن هاشم) என்பவர் மக்கா நகரைச் சேர்ந்தவர். அராபியத் தீபகற்பம் முழுமையையும் இசுலாம் என்ற ஒரே கொள்கைச் சமயத்தின் கீழ் கொண்டு வந்தவர். இவர் முஸ்லிம்களால் மட்டுமல்லாமல் பாபிஸ்துகள் மற்றும் பகாய் சமயத்தவர்களாலும் கடவுளின் திருத்தூதர் என்று போற்றப்படுகிறார்.
வீட்டு ஈ (Housefly) என்பது சைக்ளோரர்பாவின் துணை வரிசையைச் சேர்ந்த இருசிறகிப் பூச்சி ஆகும். இது செனோசோயிக் சகாப்தத்தில், ஒருவேளை மத்திய கிழக்கில் உருவாகியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது, மேலும் இது மனிதர்களின் கூட்டு வாழ்க்கையோடு உலகம் முழுவதும் பரவியுள்ளது. வீடுகளில் பொதுவாக காணப்படும் ஈ இனம் இதுவேயாகும்.
நொய்யல் ஆறு (Noyyal River) தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்தின், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்த, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், சிற்றோடைகள் இணைந்து உருவெடுக்கிறது. சமவெளிக்கு இறங்கும் நொய்யல் ஆறு, கிழக்கு நோக்கி பேரூர், குனியமுத்தூர், வெள்ளலூர், இருகூர்,சூலூர், மங்கலம், திருப்பூர், ஒரத்துப்பாளையம் என 180 கிலோ மீட்டர் பயணித்து, கரூர் அருகே நொய்யல் கிராமத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. இந்த ஆற்றின் சங்ககாலப் பெயர் காஞ்சியாறு என்பதாகும்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (சூலை 27, 1876 – செப்டம்பர் 26, 1954) 20ம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர். பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (ஆங்கில மொழி: Bhimrao Ramji Ambedkar, மராத்தி: भीमराव रामजी आंबेडकर; 14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) என்றும் பாபா சாகேப் அம்பேத்கர் (பொருள்: தந்தை) என்றும் அழைக்கப்படுபவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர்.
மணிமேகலை ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அது ஒரு மஹாயாண காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மஹாயாண பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவைகள் இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
வேதியியலுக்கான நோபல் பரிசு (Nobel Prize in Chemistry) வேதியியலில் பல்வேறு பிரிவுகளிலும் மிகச் சிறந்த பங்களிப்பு வழங்கும் அறிவியலாளர்களுக்கு சுவீடனின் அரச அறிவியல் கழகத்தினரால் ஆண்டு தோறும் வழங்கப்படும் விருது ஆகும். சுவீடிய வேதியியலாளர் ஆல்பிரட் நோபலின் உயிலின் படி 1895 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஐந்து நோபல் பரிசுகளில் இதுவும் ஒன்று. ஏனையவை இயற்பியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல், மற்றும் அமைதி ஆகியவையாகும்.
இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது.
2020 இந்தியன் பிரீமியர் லீக் என்பது 2007ஆம் ஆண்டு பிசிசிஐயால் தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் என்ற தொழில்முறை இருபது20 துடுப்பாட்டப் போட்டித் தொடரின் 13ஆம் பதிப்பாகும். மார்ச் 29இல் தொடங்கவிருந்த இத்தொடர், உலகளாவிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக ஏப்ரல் 15க்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.
திரைப்பட இயக்குநர், அல்லது இயக்குநர் என்பவர் ஓர் திரைப்படம் உருவாக்கப்படுவதைச் செயல்படுத்துபவர் மற்றும் திரைப்படத் தயாரிப்பை வழிகாட்டுபவர். ஓர் இயக்குநர் திரைக்கதையை மன ஓவியமாக தீட்டி, திரைப்படத்தின் கலை மற்றும் நாடகத்தன்மையின் அங்கங்களை கட்டுப்படுத்தித் தொழில்நுட்பக் கலைஞர்களையும் நடிகர்களையும் வழிகாட்டி தனது மன ஓவியத்தினை வெளிக்கொணரும் கலைஞராவார். சில நேரங்களில் திரைப்பட இயக்குநர்களுக்கு முழு சுதந்திரம் இருக்காது.
முத்துராமலிங்கத் தேவர் (Muthuramalingam Thevar, அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு, தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும், ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக, தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
விஜயதசமி (Vijayadashami, வங்காளம்: বিজয়াদশমী, கன்னடம்: ವಿಜಯದಶಮಿ, மலையாளம்: വിജയദശമി, மராத்தி: विजयादशमी, நேபாளி :विजया दशमी, ஒரியா :ବିଜୟାଦଶମୀ, தெலுங்கு: విజయదశమి) இந்தியா, நேபாளம் மற்றும் வங்காள தேசத்தில் பல்வேறு வடிவங்களில் கொண்டாடப்படும் ஓர் மழைக்கால இந்து சமய விழாவாகும். இது தசரா (Dasara/ Dasara/ Dussehra) என்றும் அழைக்கப்படுகிறது. தென்னகப் பகுதிகளில் நவராத்திரியின் ஓர் அங்கமாகவும், வங்காளத்தில் துர்கோத்சவத்தின் அங்கமாகவும் கொண்டாடப்படுகின்றது.
குணச்சித்திர நடிகர் (Character actor) என்பது வழக்கத்திற்கு மாறான, சுவாரஸ்யமான அல்லது விசித்திரமான கதாபாத்திரங்களில் நடிக்கும் ஒரு துணை நடிகரை குறிக்கும். இவர்கள் ஒரு திரைப்படத்தில் தனித்துவமான மற்றும் முக்கியமான துணை வேடத்தில் நடிப்பார்கள். முதன்மைக் கதாப்பாத்திரங்களோடு ஒப்பிடுகையில் இவர்களுக்கு கதைக்களத்தில் முக்கியத்துவம் சற்று குறைவாகவே கொடுக்கப்படும்.
மாயாறு (Moyar) (மோயாறு)தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய ஆறு ஆகும். இது முதுமலை பகுதியில் மாயாறு எனப் பெயர் பெற்றாலும் இதன் தோற்றுவாய் நீீீீீீலகிரி மலைகளின் மேற்கு உச்சியான முக்கூர்த்தி மலைப்பகுதியாகும். அங்கிருந்து பைகாரா முதுமலை,மசினகுடி, தெங்குமரஹாடா வழியாகப் பாய்ந்து பவானி ஆற்றுடன் கலக்கிறது. .
உழவு அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான்.
திரைப்படத் தயாரிப்பாளர் அல்லது தயாரிப்பாளர் , என்பவர் ஒரு திரைப்படம் உருவாக்க நிதியுதவி செய்பவர் ஆவார். இவர் வெறும் பண உதவி மட்டுமின்றி, திரைப்படம் உருவாகத் தேவையான அனைத்து பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். படத்திற்குத் தேவைப்படும் விளம்பரம் முதல், ஆட்களை தேர்வு செய்வதில் இயக்குநருக்கு உதவுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்.
வளிமண்டலம் (atmosphere) என்பது ஈர்ப்பு விசையின் கீழூள்ள கோள் ஒன்றையோ அல்லது போதுமான திணிவைக் கொண்ட ஒரு பொருளையோ சுற்றியுள்ள வளிமங்களின் அடுக்கு ஆகும்.புவியின் வளிமண்டலம் பொதுவாக நைதரசனால் ஆனது. அத்துடன் இது உயிரினங்களின் மூச்சியக்கத்திற்குத் தேவையான ஆக்சிசன், மற்றும் தாவரங்கள், பாசிகள், நீலப்பச்சைப்பாசிகள் ஆகியவற்றின் ஒளித்தொகுப்புக்குத் தேவையான கார்பனீராக்சைடு ஆகிய வளிமங்களையும் கொண்டுள்ளது. வளிமண்டலம் சூரியவொளியின் புறவூதாக் கதிர்வீச்சு, சூரியக் காற்று, அண்டக் கதிர் ஆகியவற்றினால் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து காக்கிறது.
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமஸ்கிருதம்:பிரகதீஸ்வரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும் , தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.
வரலட்சுமி நோன்பு (வரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம்) என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி, இந்துக்களின் நோன்பு இருத்தலாகும். ஆடி மாதம் வளர்பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில், கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலிப் பெண்கள் கடைபிடிக்கின்றனர். இந்நாளில், வீட்டைச் சுத்தம் செய்து, விளக்கேற்றி, வாசனைப் புகையினால் இல்லத்தை நிறைத்து, கலசம் ஒன்றில் லட்சுமியை வணங்கித் தொடங்குவர்.
திரைக்கதை ஆசிரியர் என்பவர் மக்கள் ஊடகமான திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நிகழ்படங்கள் போன்றவற்றிக்கு கதை எழுதுபவர்கள் ஆவார்கள். இதற்கென படிக்காமல், சுதந்திரமாக திரைக்கதை எழுதுபவர்கள், முன்னோர்கள் வகுத்த விதிகளை அறிந்து பின் எழுதுபவர்கள் என இரு விதமான திரைக்கதை ஆசிரியர்கள் உள்ளார்கள். ராபர்ட் டௌனி என்பவர் எழுதிய சைனா டவுன் என்ற திரைக்கதை சிறந்த திரைக்கதையாக போற்றப்படுகிறது.
குற்றியலுகரம் என்பது ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா: கு, சு, டு, து, பு, று) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துகள் (எ.கா: ற, கி, பெ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவேயாகக் குறைந்து ஒலிக்கும் வரையறை கொண்டது. இதனையே வேறு விதமாகச் சொல்வதென்றால், தனி நெடிலுடனோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்யோடு சேர்ந்து வரும் உகரம், தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரையளவே ஒலிக்கும். குற்றியலுகரம் என்பது அவ்வாறு குறைந்தொலிக்கும் உகரமாகும்.
கவிதை (Poiesis) என்பது அழகியல் உணர்ச்சியுடைய, ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை பண்புச் சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கியக் கலை வடிவம் ஆகும். மேலும், மொழியில் உள்ள ஒலியன் அழகியல், ஒலிக் குறியீடுகள், மற்றும் சந்தம் (Metre) ஆகியவற்றுடன் இடம், இயல்பான பொருள் ஆகியவற்றை வெளிப்படையாகக் காட்டுவதாகக் கவிதை உள்ளது. உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.
கௌரவத் தோற்றம் அல்லது சிறப்பு தோற்றம் (Cameo appearance) என்பது நிகழ்த்து கலைகளில் நன்கு அறியப்பட்ட நபரின் சுருக்கமான தோற்றம் அல்லது குரல் பகுதியோ கௌரவத் தோற்றம் ஆகும். இதில் தோன்றும் பாத்திரங்கள் சிறியதாகவும் அவற்றில் பல பேசாதவையாகவும் பொதுவாக அவை சில சிறப்பு முக்கியத்துவங்களைக் கொண்ட ஒரு படைப்பில் தோன்றும். இந்த கௌரவத் தோற்றதில் பிரபலங்கள், திரைப்பட இயக்குநர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் அல்லது இசைக்கலைஞர்கள் போன்றவர்கள் பொதுவாக தோன்றுவார்கள்.
வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் முகமதியர்களின் படையெடுப்புக்குப்பின்பு கம்பிளி ராஜ்ஜியம் இழந்து விஜயநகரம் உருவாக்கினர்.
முன்னணி நடிகர் அல்லது முன்னணி நடிகை (Leading actor) என்பது திரைப்படங்கள், மேடை நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றில் கதாநாயகன் வேடத்தில் நடிப்பவர்களை குறிக்கும். முன்னணி என்ற சொல் நபர் ஒருவர் தொடரில் மிகப்பெரிய பாத்திரத்தில் நடிப்பவரை குறிக்கலாம் அல்லது முன்னணி நடிகரையும் பொதுவாக குறிக்கலாம். இவர்களின் கதாபாத்திரம் துணை அல்லது குணசித்திர பாத்திரங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.புதுக்கோட்டை மாவட்டம் ஐல்லிக்கட்டின் "சொர்க்க பூமியாக " இன்னும் திகழ்ந்து வருகிறது.
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்
தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சாதிகளையும் பட்டியலிட்டுள்ளது. இவை முறையே; பட்டியல் பழங்குடியினர் (36) பட்டியல் சாதிகள் (76) பிற்படுத்தப்பட்ட சாதிகள் (136) பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் (இஸ்லாமியர்)(7) மிகவும் பிற்பட்ட சாதிகள் (41) சீர்மரபினர் (68) முற்பட்ட சாதிகள் (79)என்று 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் இருக்கும் முற்பட்ட வகுப்பினர், அனைத்து வகுப்பினரும் பங்கேற்கும் பொதுப்பிரிவுகளின் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மட்டுமே இடம் பெற இயலும்.
கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும். கல்வியாளர்கள் கூற்றின்படி, இளைய தலைமுறையினரை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம்.
சிந்துவெளி நாகரிகம் (Indus Valley Civilisation) மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது.
துணை நடிகர் என்பது ஒரு நடிகர் தொலைக்காட்சியில் அல்லது திரைப்படத்தில் முன்னணி நடிகர்களுக்கு கீழே ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள். இவர்களின் கதாபாத்திரம் வெற்றி பெற்று அங்கீகரிக்கும் வகையில், தொடர்கள் மற்றும் திரைப்படத் தொழில்கள் சிறந்த துணை நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது, போன்ற தனி விருதுகள் வழங்குகின்றன. இவர்களின் கதாபாத்திரம் சிறிய கதாபாத்திரம் முதல் பெரிய கதாபாத்திரம் வரை இருக்கும்.
(சுற்றுச்சூழல் பாதுகாப்பு) (environmental protection) என்பது சுற்றசூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகையினாலும் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்று சூழல் சில நேரங்களில் நிரந்தரமாக பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தி நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளன.
பாளையங்கோட்டை என்பது திருநெல்வேலி மாநகராட்சியின் ஒரு பகுதியாகும்.திருநெல்வேலி மாநகராட்சியாக உருவாக்கப்படுவதற்கு முன்பாக இப்பகுதி தனி நகராட்சியாகச் செயல்பட்டு வந்தது. கல்விக்கு பெயர் போன இங்கு மிகப் பெரிய கல்வி நிறுவனங்கள் ஏராளம் அமைந்துள்ளது. இங்கு அதிக அளவில் கல்வி நிறுவனங்கள் இருப்பதாலும் மற்றும் தமிழ்நாட்டில் முதல் முறையாக பார்வையற்றவர் மற்றும் காதுகேளாதோர் பள்ளி துவங்கப்பட்டதால் இது தமிழகத்தின் "ஆக்ஸ்போர்ட்” என்று பாளையங்கோட்டை பெருமையுடன் அழைக்கப்படுகிறது.
அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் சோழ பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே.
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது.
சினைப்பை நோய்க்குறி (Polycystic ovary syndrome)(PCOS) என்பது பெண்களுக்கு ஆண்ட்ரோஜன் எனப்படும் ஆண்தன்மைச் சுரப்பி அதிகரிப்பதன் காரணமாக ஏற்படும் ஒரு கூட்டு நோய் அறிகுறியாகும். ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் இல்லாமலிருத்தல், அதிகமான குருதிப்போக்கு, உடலிலும் முகத்திலும் அதிகமான முடிவளர்ச்சி, முகப்பரு, இடுப்பெலும்பு வலி, மலட்டுத்தன்மை, சில தோல் பகுதிகள் மட்டும் கெட்டியாகவும் கருத்தும் மிருதுவாகக் காணப்படுதல் ஆகியன இதன் அறிகுறிகளாகும். மேலும் இதனோடு நீரிழிவு நோய், உடற் பருமன் இதய நோய் , உறங்கும்போது மூச்சு விடுதலில் மாற்றம், சீரற்ற மனநிலை, கருப்பை அகப்படலப் புற்றுநோய் ஆகியவையும் இதனோடு தொடர்புடையனவாகும்..
இந்திய வரலாறு (History of India) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் வரலாற்றுக் காலம் முன்பு வாழ்ந்த மக்கள், அவர்தம் சமுதாயம், சிந்து சமவெளி நாகரிகம் இந்தோ-ஆரியப் பண்பாடு உள்ளடக்கிய வேதகால நாகரிகம் தொடங்கி இன்றுவரை உள்ளிட்டகாலம் அடங்கும். மேலும் பல கலாச்சாரங்களின் சாரமாகவும் பண்பாடுகளை உள்வாங்கியும் பிறந்த இந்து சமயம், அதன் வளர்ச்சி குறித்தும் சிரமணா இயக்கத்தின் வளர்ச்சி, சிரவுத்தா பலிகளின் வீழ்ச்சி, சைனம், பௌத்தம், சைவம், வைணவம் மற்றும் சக்தி வழிபாடு இவைகளின் வளர்ச்சி, தாக்கம், மேலும் இப்பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த அரச பரம்பரை, பேரரசுகளின் தோற்றம், தாக்கம், இடைகாலத்தில் தோன்றிய இந்து மற்றும் முகலாய அரச பரம்பரைகள் குறித்த தகவல்கள், பிற்காலத்தில் வந்த ஐரோப்பிய வணிகர்கள், அதன் தொடர்ச்சியாக அமைந்த ஆங்கிலேய அரசு, அதன் தொடர்ச்சியாக எழுந்த விடுதலை இயக்கம், அதன் பின் நாடு பிரிவினை அடைந்து இந்தியக் குடியரசு பிறந்த வரை தகவல்கள் உள்ளிட்டவை அடங்கும்.சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துணைக்கண்டத்தில் இன்றைய மனிதர்களின் உடற்கூறியல் வடிவத்தை ஒத்த மனிதர்களோ அல்லது 5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தற்கால மனிதனின் முன்னோடிகளோ வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிமு 3200 முதல் கிமு 1300 வரை இந்தியாவில் செழிப்பாக விளங்கிய சிந்துவெளி நாகரிகம்தான் தெற்கு ஆசியாவில் தோன்றிய முதல் நாகரிகம் ஆகும்.
வல்லினம் மிகும் இடங்கள் என்பது தமிழ் மொழியில் அடுத்தடுத்து இரண்டு சொற்கள் வரும்போது முதல் சொல்லின் இறுதியில் ஒரு வல்லின எழுத்து சேர்வதைக் குறிக்கும். ஒரு நிலைமொழியோடு வருமொழி க, ச, த, ப வருக்க எழுத்துகளில் தொடங்குஞ் சொல்லாக அமையும்பொழுது அவ்வல்லொற்று சிலவிடங்களில் மிகுந்தும் சிலவிடங்களில் மிகாமலும் வரும். இவற்றையறிந்து பயன்படுத்தாமையைச் சந்திப்பிழையெனக் கூறுவர்.
புதினம் அல்லது நாவல் என்பது மக்களால் பரவலாக விரும்பப்படும் ஒரு இலக்கிய வடிவம் ஆகும். இதில் வாழ்க்கையும், நிகழ்வுகளும் கற்பனையாக உரைநடையில் எழுதப்படுகின்றன. தற்காலப் பயன்பாட்டில் புதினம், நீளமாக இருத்தல், புனைகதையாக அமைதல், உரைநடையில் எழுதப்படல் போன்ற இயல்புகளால் ஏனைய இலக்கிய வடிவங்களிலிருந்து வேறுபடுத்தப்படுகின்றது.